Pages

Monday, November 19, 2012

துப்பாக்கி

நெடுநாட்கள் கழித்து விசய் நடித்த திரைப்படம் ஒன்றை பார்த்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர விழைகிறேன். திருமலை மற்றும் அதன் பிறகு அதே போன்று அல்லது அதே திரைப்படம் வேறு பெயர்களில் வெளிவந்த பொது அவற்றை பார்த்து மனமுடைந்து மீண்டும் தற்கொலைக்கு முயலக்கூடாது என்று சபதமெடுத்து இதுநாள் வரை விசய் நடித்த திரைப்படங்களை தவிர்த்து வந்தேன். சமீபத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தை அது விசய் படமல்ல சங்கரது படம் என்று என் நண்பர்கள் பலமுறை தைரியம் கூறியும், அதனை இந்தியிலேயே சப்-டைட்டிலுடன் பார்த்து திருப்திகொண்டேன். அப்படிப்பட்ட நான் இந்த துப்பாக்கி படம் பார்க்க சென்றதுக்கு ஒரே காரணம் அம்மாவின் நூறாண்டு சாதனை ஆட்சி. எங்கள் வீட்டில் இன்வெர்ட்ர் இருந்தும் கேபிள் நிலையத்தில் இன்வெர்டர் இல்லாத காரணத்தால் வேறுவழியின்றி துப்பாக்கி படத்திற்கு சென்றேன்.

திரையரங்கிற்கு சென்ற எனக்கு டிக்கெட் விலை ஏனோ சிறு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் பெங்களூரில் முன்னூறு ரூபாய்க்கு skyfall படம் பார்த்ததை நினைத்து சுதாரித்துக்கொண்டு டிக்கெட் வாங்கினேன். நான் உள்ளே செல்லும் பொது ஏற்கனவே படம் தொடங்கியிருந்தது. "இளைய தளபதி டாக்டர் விசய் நடிக்கும்" என்ற வார்த்தைகளின் ஒருங்கிணைந்த அழகை கண்டுரசிக்கும் பாக்கியத்தை இழந்து டிக்கெட் விலையில் பாதியில் வீணடிதிருந்தது அப்பொழுதான் புரிந்தது.


முதல் காட்சியிலேயே விசய் யாரையோ குத்திக்கொண்டு இருந்தார். தவறாக நினைக்க வேண்டாம், யாருடனோ சண்டை போட்டுக்கொண்டிருந்தார். திருப்பி அடித்தால் படத்தின் இதர காட்சிகளை படமாக்க விசய் இருக்கமாட்டார் என்ற காரணத்தினாலோ என்னவோ அந்த நபர் கடைசிவரை அடி வாங்கிக்கொண்டே இருந்தார். அந்த காட்சிகளில் விசயின் பராக்கிரமத்தை விட ஒளிப்பதிவும் கலையும் அதிகம் பேசியிருந்தன. மற்றும் எ.ஆர்.முருகதாஸ் என்ற பெயர் திரைகதை  மீது நம்பிக்கை ஏற்படுத்தியது. ஆதலால் நான் பயந்த ஒரே விசயம் விசய் தான்.

ஆரம்ப பெண்பார்க்கும் காட்சிகளில் விசய் சற்று ஓவர் ஆக்டிங் செய்திருந்தாலும் காஜல் அகர்வால் மேலும் அதிகமாக நடித்து விசய்க்கு மதிப்பெண் வாங்கிக்கொடுத்திருக்கிறார். காஜல் அகர்வாலிடம் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்றும்  ஒன்றில் இரண்டானது. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனை தேவையான அளவிற்கு பயன்படுத்தியிருந்தார் அல்லது காட்டியிருக்கிறார் என்று கூறலாம். ஒளிப்பதிவாளரும் அதற்க்கு மிகவும் துணைபுரிந்திருந்தார். மற்றபடி காஜலுக்கு வேறு சிறப்பான பணிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

நண்பன் படத்தில் கலக்கிய சத்யனுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் சற்று குறைவாகவே இருந்தது. விசய்க்கு அதிக ரியாக்சன்கள் வராது என்ற காரணத்தினால், விசயின் முக பாவங்களை சத்யன் முகத்தை கடன் வாங்கி காட்டியிருந்தார் இயக்குனர். துப்பாக்கி படத்தில் காவல் உதவி ஆய்வாளராக வரும் சத்தியனுக்கு கடைசி வரை ஒருமுறை கூட துப்பாக்கி கொடுக்கப்படவில்லை என்பது கண்டனத்திற்குரியது. மேலும் மும்பையில் இருந்தாலும் தமிழ் போலீஸ் என்றால் தொப்பை இருக்கும் என்பதை சத்யன் மூலமாக இயக்குனர் தைரியமாக எடுத்துரைக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சிகளை கில்லி படத்திலிருந்து உருவியிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்றும்பொழுது 'காரசிங்கம் A/C' திரையரங்கில் மிகுந்த வரவேற்பை பெறகூடும். ஆனால் இந்த முறை வில்லனை உசுப்பேற்றுவதற்கு கதாநாயகி பயன்படுத்தப்படவில்லை. கதாநாயகி ரசிகர்களை உசுப்பேற்ற மட்டுமே பயன்பட்டுள்ளர் என்பது வேறு விஷயம். கில்லி படத்தை ஒப்பிடுகையில் துப்பாக்கியில் விசய் நுடவைதியத்தில் சற்று தேர்ச்சிபெற்று தெரிகிறார். டாக்டர் பட்டம் பெற்ற பிறகு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக இருக்கலாம்.

மட்ட்றபடி லோடு ஆன துப்பாக்கியை மீண்டும் மீண்டும் லோடு செய்வதால் துப்பாக்கிக்கு ஸ்டார்டிங் டிரபுள், ஞாபக மறதி போன்ற வியாதிகள் இருக்குமோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது. டி.ஐ.எ, சிலீப்பர் செல்ஸ், பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ், மைக்ரோசிப் போன்ற வார்த்தைகளை அதிகமாக பிரயோகப்படுதியிருப்பது viva எக்சாம்களை ஞாபப்படுதுகிறது. பன்ச் டயலாக் வேண்டும் என்று விசய் அடம்பிடித்து கேட்டதால் கொடுக்கப்பட்ட "ஆயிரம் பேரை கொல்ல நினைக்கும்..." என்ற வசனம் கைதட்டல்களுக்கு உரித்தானது.

கடைசிவரை இங்கு ஜெயராம் பற்றி பேசவே தோன்றவில்லை. படத்தில் அவருடைய பகுதியும் அவ்வாறே இருந்தது.

இறுதியில் இந்த விமர்சனத்தை எழுதும் அளவிற்கு நான் நல்ல மனநிலையில் இருப்பதால் மற்ற விசய் படங்களை விட துப்பாக்கி சிறப்பாகவே இருக்கிறது என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

நாள்: 17-Nov-2012
இடம்: பட்டுக்கோட்டை அன்னபூர்ணா திரையரங்கம்